
கடந்த ஆக. 10 அன்று நடைபெற்ற அரசு விழாவில் வைத்து, சிக்கிம் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லாத 32,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ. 20,000-க்கான காசோலைகளை முதல்வர் பிரேம் சிங் தமாங் வழங்கினார்.
சிக்கிம் மாநில அரசால் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், வேலைக்குச் செல்லாத அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 40,000 நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகை இரண்டு கட்டங்களாக - முதல் கட்டத்தில் ரூ. 20,000 மற்றும் இரண்டாம் கட்டத்தில் ரூ. 20,000 வழங்கப்படும்.
நிதி உதவியுடன், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் வெந்நீர் பாட்டிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மாநில அரசு மொத்தம் ரூ. 128 கோடியை செலவிடும் என்று கூறப்படுகிறது.
மாநிலத்திற்காக பல்வேறு தியாகங்களில் ஈடுபட்டு, பங்களிப்பை வழங்கிய தாய்மார்களை கௌரவிப்பதற்காக நடைபெற்ற `முதல் அம்மா சம்மான் திவாஸ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவியை முதல்வர் தமங் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர், `அம்மா சம்மான் திவாஸ் நிகழ்வை தொடங்குவதற்கான முடிவு தனிப்பட்டது மற்றும் அரசியல் ரீதியிலானது’ என்று விவரித்தார். மேலும், `சிக்கிமின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில், குறிப்பாக கடினமான காலங்களில் தாய்மார்கள் எப்போதும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்’ என்று அவர் கூறினார்.
சிக்கிம் மாநிலத்தின் ரங்போவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து தாய்மார்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.