
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று (ஜூன் 30) நடைபெற்ற வெடி விபத்தில் சிக்கி இதுவரை 37 பேர் வரை உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. 24 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இந்த ஆலையில், மைக்ரோ கிறிஸ்டலைன் செல்லுலாஸ் என்ற ரசாயன தூள் தயாரிக்கப்பட்டு வந்தது.
நேற்று (ஜூன் 30) காலை இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராவிதமாக அங்கிருந்த பாயிலர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே 5 பேர் வரை உயிரிழந்ததாகவும், 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் சிக்கி ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (ஜூலை 1) காலையில் 37 ஆக உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின், தொழிற்சாலையின் துணைத் தலைவர் எல்.எஸ். கோஹனும் அடக்கம்.
இந்த விபத்தில் சிக்கிய சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகியுள்ளதால், அவற்றை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பீஹார், உ.பி., மற்றும் ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்மா விபத்து நடைபெற்ற ஆலையில் வைத்து நேற்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.