தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: ராகுல் காந்தி கருத்து என்ன?

காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், மாநில முதல்வர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தில்லியில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்கள்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: ராகுல் காந்தி கருத்து என்ன?

தேர்தலுக்குப் பிந்தை கருத்துக் கணிப்பு, மோடி ஊடகத்தின் கணிப்பு என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இண்டியா கூட்டணித் தலைவர்கள் தில்லியிலுள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நேற்று கூடினார்கள். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தியிடம், மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, சித்து மூஸ் வாலா பாடலைக் கேட்டுள்ளீர்களா என அவர் கிண்டலாகப் பதிலளித்தார். 295 இடங்கள் என்பதைக் குறிப்பிடும் வகையில் இந்தப் பதிலை அவர் அளித்தார்.

மேலும் பேசுகையில், "நேற்று வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கிடையாது. இது மோடி ஊடகத்தின் கணிப்பு. அவருடைய கற்பனைக் கணிப்பு" என்றார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், முதல்வர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். அவர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது அரசுக்கான போலிக் கணிப்பு. இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது" என்றார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்ததையடுத்து, மாலை 6 மணிக்குத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகின. இதில் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் எனக் கணித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in