
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு டிராகன் விண்கலம் இன்று (ஜூலை 15) வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணித்து, இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகிய விண்வெளி வீரர்கள் ஆக்ஸிம் 4 திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ல் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, 17 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, அங்கு ஏற்கனவே இருந்த விண்வெளி வீரர்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் இந்த குழுவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களை சுமந்துகொண்டு நேற்று (ஜூலை 14) மாலை சரியாக 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கி டிராகன் விண்கலம் பயணத்தைத் தொடங்கியது.
அதன்பிறகு, திட்டமிட்டபடி பூமியின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வளிமண்டலத்தில் நுழைந்ததும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5.5 கி.மீ. உயரத்தில் டிராகன் விண்கலத்தின் நான்கு பாராசூட்டுகளும் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விரிவடைந்தன.
இதைத் தொடர்ந்து (சுமார் 23 மணி நேர பயணத்திற்குப் பிறகு), இன்று பிற்பகல் 3 மணியளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் டிராகன் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
கரை திரும்பிய பிறகு, 4 வீரர்களுக்கும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு 7 நாள்கள் வரை அவர் அனைவரும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.