பூமியை நோக்கிப் பயணம்: தயாரான சுபான்ஷு சுக்லா | Axiom 4

அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையிலான குழுவினர், டிராகன் விண்கலத்தில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சுபான்ஷு சுக்லா குழுவினர்
சுபான்ஷு சுக்லா குழுவினர்ANI
1 min read

AXIOM 4: சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அடங்கிய ஆக்ஸிம் 4 குழு பூமிக்குத் திரும்பும் பயணத்தை இன்று (ஜூலை 14) தொடங்குகிறது.

சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (ஜூலை 14) மாலை 4.30 மணிக்குப் புறப்படும் டிராகன் விண்கலம், பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து திட்டமிட்ட பாதையில் பயணிக்கும். விண்கலம் ஒட்டுமொத்தமாக 22.5 மணிநேரம் பயணிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஜூலை 15-ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் கலிபோர்னியா கடற்கரை பகுதியில் விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1984-ம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு, விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். அத்துடன்,  14 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மனி பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள டிராகன் விண்கலத்திற்கு இந்த 4 வீரர்களும் திரும்புவது படிப்படியான செயல்முறையாகும். இதற்கென பல்வேறு சோதனைகள் மற்றும் நடைமுறைகளை கவனமாகப் பின்பற்றவேண்டும்.

அந்த வகையில், முதலில் அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையிலான குழுவினர், டிராகன் விண்கலத்தில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் நால்வரும் டிராகன் விண்கலத்தில் நுழைந்தனர். விண்வெளி நிலையத்தில் இருந்த பிற வீரர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in