இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 19 நபர்கள் உயிரிழப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று (செப்.10) பேசியுள்ளார். இதனால் ஒரு நாளில் நூற்றுக்கணக்கான நபர்கள் சாலை விபத்துகளால் உயிரிழப்பதை அறிய முடிகிறது.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 64-வது வருடாந்திர மாநாடு தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகள் குறித்தும், அவற்றைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசியுள்ளார். மாநாட்டில் நிதின் கட்கரி பேசியவை பின்வருமாறு:
`நம் நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 53 சாலை விபத்துகளும், அதனால் 18 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதில் 45 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களாலும், 20 சதவீத விபத்துகள் பாதசாரிகளாலும் ஏற்படுகின்றன. ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்குமாறு உங்கள் அனைவரிடமும் நான் கோரிக்கைகளை முன்வைக்கிறேன். இதனால் போக்குவரத்து விதிகள் தெரிந்த நல்ல ஓட்டுனர்கள் நமக்குக் கிடைப்பார்கள்’ என்றார்.
மேலும் தன் உரையில் மோசமான சாலைகள் அமைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தன் அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் விவரித்துப் பேசினார் கட்கரி. அத்துடன் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் (Bharat - NCAP) அவசியம் குறித்தும் அவர் உரையாற்றினார்.
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரத்யேக வாகனப் பாதுகாப்புச் சோதனைத் திட்டமாகும். இதில் குறிப்பிட்டுள்ள தர நிலைகளை முன்வைத்து எந்த அளவுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் பாதுகாப்பு மிகுந்ததாக உள்ளன என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கு ஏற்றபடி மதிப்பீடு வழங்கப்படும்.