இன்று (அக்.2) தலைநகர் தில்லியில் ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ. 2000 கோடி மதிப்பிலான 560 கிலோ கோக்கைன் போதைப் பொருள் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரௌலி பகுதியில் வைத்து இந்த கோக்கைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கோக்கைன் போதைப் பொருளை வைத்திருந்த 4 நபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களால் தில்லியில் நடத்தப்படும் போதைப்பொருள் சிண்டிகேட்டுக்கு சொந்தமானதாக இந்த கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் இருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
560 கிலோ போதைப் பொருளை தில்லி மற்றும் அதனைச் சுற்றி உள்ள தேசிய தலைநகர் பகுதியில் விற்க போதைக் கும்பல் திட்டமிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் இது மிக அதிகமானதாகும்.
தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் 2 மாதங்கள் உழைத்ததன் பலனாக தீபாவளிக்கு முன்பு இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தில்லி திலக் நகர் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 400 கிராம் ஹெராயின் மற்றும் 160 கிராம் கோக்கைன் வைத்திருந்த ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மொஹமத் வாரிஸ் மற்றும் அப்துல் நாயிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.