

உத்தரப் பிரதேசத்தில் சொகுசு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய புகையிலை வியாபாரி ஏ.கே. மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில் கடந்த பிப்ரவரி 8 அன்று அதிவேகமாக வந்த லம்போர்கினி ரக சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் புகுந்து விபத்து ஏற்படுத்தியது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓட்டுநர் கைது
விபத்து ஏற்படுத்திய காரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை, அப்பகுதியினர் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மோகன் என்பவரைக் கைது செய்தனர்.
புகையிலை வியாபாரி மகன்
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்ததில், அவர் பிரபல புகையிலை வியாபாரி ஏ.கே மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று ஷிவம் மிஸ்ராவைக் கைது செய்த காவல்துறையினர் அவரது ரூ. 10 கோடி மதிப்புள்ள சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
ஓட்டுநரின் வாக்குமூலம்
இதற்கிடையில் நேற்று (பிப். 11) கான்பூர் நீதிமன்றத்தில் மோகன் ஆஜரானபோது “காரை ஓட்டிச் சென்றது நான் தான். தனக்கு அருகில் ஷிவம் மிஸ்ரா அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் என்மீது விழுந்துவிட்டார். அதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டது” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். முன்னதாக ஷிவம் மிஸ்ராவுக்கு வலிப்பு நோய் உள்ளதை அவரது குடும்பமும் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஷிவம் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
ஆனால், ஷிவம் மிஸ்ராவின் குடும்பப் பின்னணியைக் கருதி காவல்துறை இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் நடந்து கொண்டது என்று பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதனால்தான் விபத்து நடந்து 4 நாட்களுக்குப் பிறகு ஷிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதியின் காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் குமார் கௌர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கூறிய கான்பூர் காவல் ஆணையர் ரகுபீர் லால், அவர் சம்பவம் நடந்த அன்று விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
Shivam Mishra was arrested and granted bail four days after the Rs 10-crore luxury car rammed an autorickshaw, a motorcycle and later crashed into a pole, leaving one person injured.