
மும்பை வடமேற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் எதுவும் நிகழவில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பை வடமேற்கு தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை வேட்பாளர் ரவீந்திர வாய்கர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்டது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வேட்பாளர் அமோல் கீர்த்திகர்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் ரவீந்திர வாய்கர் உறவினர் ஒருவர் அனுமதியின்றி செல்ஃபோன் பயன்படுத்தியது தொடர்பாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும்போது பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.
செய்திகளில் வெளியான தகவலுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. மும்பை வடமேற்கு தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனா சூர்யவன்ஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்கு இயந்திரத்தைத் திறக்க ஓடிபி தேவையில்லை என விளக்கமளித்தார்.
இருந்தபோதிலும், தினேஷ் குரவ் என்பவரின் சொந்த செல்ஃபோன் ரவீந்திர வாய்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கரிடம் இருந்ததை தேர்தல் நடத்தும் அலுவலர் மறுக்கவில்லை. தினேஷ் குரவ் என்பவர் ஜோகேஷ்வரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் ஆபரேட்டர்.
தரவுகளைப் பதிவேற்றம் செய்ய தேர்தல் நடத்தும் துணை அலுவலருக்கு ஓடிபி அனுமதி அவசியம். ஆனால், தரவுகளைப் பதிவேற்றம் செய்வதும், வாக்கு எண்ணப்படுவதும் முற்றிலும் வெவ்வேறானது என தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனா கூறினார். மேலும், வாக்கு எண்ணப்படுவதற்கும், அனுமதி வழங்கப்படாத நபர் ஒருவர் செல்ஃபோனை பயன்படுத்தியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். எனினும், செல்ஃபோனை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மறுவாக்கு எண்ணிக்கை குறித்து விளக்கமளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனா, "வாய்கர் மற்றும் கீர்த்திகர் என இருவருமே மறுவாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின்றி சிசிடிவி காட்சிகளை வெளியிட முடியாது" என்றார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைக்குக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடமிருந்து ஆதரவுக் குரல் வந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சௌஹான் கூறுகையில், "மும்பை வடமேற்கு தொகுதியின் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட வேண்டும்" என்றார்.