ஷீலா தீக்ஷித்... கெஜ்ரிவால்... புதுதில்லி...: முற்றுபெற்ற ஓர் அரசியல் சுழற்சி!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுதில்லி தொகுதியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது, பார்வையைக் கடந்த காலத்தை நோக்கி இழுத்துள்ளது.
1998, 2003 சட்டப்பேரவைத் தேர்தலில் கோல் மார்கெட் தொகுதியாக இருந்தது தான், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2008-ல் புதுதில்லி தொகுதியாக மாறியது. 1998, 2003, 2008 என மூன்று முறையும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்.
2013 சட்டப்பேரவைத் தேர்தலிலும் புதுதில்லி தொகுதியில் களம் கண்டார் ஷீலா தீக்ஷித். அப்போது எதிர்முனையில் களமிறங்கியது அரவிந்த் கெஜ்ரிவால். ஊழல் எதிர்ப்பு அலையில் பெரும் கவனத்தைப் பெற்று ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கி, அதே உத்வேகத்தில், ஷீலா தீக்ஷித் போன்ற ஜாம்பவானை நேரடியாக எதிர்க்கத் துணிந்தார். ஒருபுறம் இது கெஜ்ரிவாலின் துணிச்சலை வெளிப்படுத்தியது. மறுபுறம், முதல்வர் வேட்பாளரை எதிர்த்து முதல்வர் வேட்பாளர் போட்டியிடுவதா என்ற பரபரப்பை கிளப்பியது.
முதன்முறையாக தேர்தல் களம் கண்டாலும், ஷீலா தீக்ஷித்தைத் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார் கெஜ்ரிவால். 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை ஆட்சியிலிருந்தும் அகற்றியது ஆம் ஆத்மி. தில்லி அரசியல் வரலாற்றில் இது மிகப் பெரிய திருப்புமுனை.
12 வருடங்களுக்குப் பிறகு அதே புதுதில்லி தொகுதியில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினார் கெஜ்ரிவால். இம்முறை கெஜ்ரிவால் எனும் பெரும் புள்ளியை எதிர்த்துப் போட்டியிட்டது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் போட்டியில் முக்கியஸ்தராக இருக்கும் பர்வேஷ் வெர்மா. 12 வருடங்களுக்கு முன்பு ஷீலா தீக்ஷித் எப்படி தோல்வியடைந்தாரோ, அதேபோல இம்முறை தோல்வியடைந்துள்ளார் கெஜ்ரிவால். ஆம் ஆத்மியும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலை வென்றது பர்வேஷ் வெர்மாவாக இருந்தாலும், அவரைத் தோற்கடித்ததில் முக்கியப் பங்கு வகித்தது ஷீலா தீக்ஷிதின் மகன் சந்தீப் தீக்ஷித். புதுதில்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் தான் சந்தீப் தீக்ஷித்.
புதுதில்லி தொகுதியில் முதலிடம் பிடித்த பர்வேஷ் பெற்ற வாக்குகள் 30,088. கெஜ்ரிவால் பெற்ற வாக்குகள் 25,999. இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 4,089. இதே தொகுதியில் போட்டியிட்டு சந்தீப் தீக்ஷித் பெற்ற வாக்குகள் 4,568. இவர் பெற்ற வாக்குகளே கெஜ்ரிவாலின் தோல்வியைத் தீர்மானித்துள்ளது. 2013-ல் ஷீலா தீக்ஷித்தைத் தோற்கடித்து புதுதில்லியில் பயணத்தைத் தொடங்கிய கெஜ்ரிவால் அதே புதுதில்லியில் ஷீலா தீக்ஷித் மகனால் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
புதுதில்லியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கெஜ்ரிவாலின் வெற்றியால் தொடங்கிய ஓர் அரசியல் சுழற்சி, அதே புதுதில்லி கெஜ்ரிவாலின் தோல்வியால் முற்றுபெற்றுள்ளது.