
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு போன்றவை குறித்து வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.களைக் கொண்ட ஏழு குழுக்களை மத்திய அரசு அமைக்கப்படவுள்ளது. இந்த குழுக்களை வழிநடத்தும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளைப் பிற நாடுகளுக்கு விளக்கப்போகும் அனைத்துக் கட்சி எம்.பி.க்களைக் கொண்ட 7 குழுக்களை, தலைமையேற்கும் தலைவர்களின் பெயர்களை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் இன்று (மே 17) அறிவித்துள்ளது.
இதன்படி, காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ரவி ஷங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் (சரத் பவார்) சுப்ரியா சுலே, சிவசேனாவின் (ஏக்நாத்) ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களை வழிநடத்துகின்றனர்.
ஒவ்வொரு குழுக்களிலும் 5-6 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த எம்.பி.க்கள் குழுக்கள் பயணிக்க உள்ளன. மே 22-க்குப் பிறகு இந்த குழுக்கள் பயணத்தைத் தொடங்குகின்றன.
ஆபரேஷன் சிந்தூரை பகிரங்கமாக ஆதரித்ததைத் தொடர்ந்து, எம்.பி.க்கள் குழுவை வழிநடத்தும் நபர்களில் ஒருவராக சசி தரூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கையை ஆதரித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் உரசல்களை ஏற்படுத்தியதாகவும், சில காங்கிரஸ் தலைவர்கள் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.