
காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் ஒரு வார்த்தைப் போரை உருவாக்கும் வகையில், அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்துள்ளார். `பிரதமர் மோடியின் குணாதிசயங்கள் இந்தியாவின் முதன்மையான சொத்து’ என்று அவர் விவரித்துள்ளார்.
சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா, பனாமா, கயானா, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்திய தரூர், பிரதமர் மோடியின் ஆற்றலுக்கு ஆதரவு தேவை என்று நாளிதழில் எழுதியுள்ளார்.
`பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, ஈடுபாடு ஆகியவை, உலக அரங்கில் இந்தியாவிற்கான முதன்மையான சொத்துகளாக உள்ளன, ஆனால் அவற்றுக்கு அதிக ஆதரவு தேவை’ என்று தி ஹிந்து நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையில் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தலைமையிலான குழுவின் அமெரிக்க பயணித்தின்போது, பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு அங்கே இருந்தபோதும், அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவின் கவலைகளை எதிரொலித்ததாக தரூர் குறிப்பிட்டுள்ளார்.
`பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு அதே நேரத்தில் அங்கே இருந்தபோதும், பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்தவர்கள் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் எங்கள் கவலைகளை எதிரொலித்தனர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்கள்’ என்று அவர் கட்டுரையில் எழுதியுள்ளார்.
பஹல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சசி தரூர் வெளிப்படையாக ஆதரித்தார். காங்கிரஸ் வழங்கிய பட்டியலில் தரூரின் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், அனைத்து கட்சி குழு ஒன்றை வழிநடத்த மத்திய அரசாங்கத்தால் அவர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.