5 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாம்: தேர்தலில் போட்டியிட இடைக்கால ஜாமின் கோரி மனு! | Sharjeel Imam |

அக்டோபர் 15 முதல் அக்டோபர் 29 வரை 14 நாள்களுக்கு இடைக்காலமாக ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார் ஷர்ஜீல் இமாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் இடைக்கால ஜாமின் கோரி தில்லி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார் ஷர்ஜீல் இமாம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியதற்காக ஷர்ஜீல் இமாம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லி வன்முறை சதி வழக்கில் ஜாமின் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஷர்ஜீல் இமாம். இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தில்லி விசாரணை நீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்துள்ளார். பஹதுர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, வேட்புமனு தாக்கல் செய்வது, பிரசாம் மேற்கொள்வது உள்ளிட்ட காரணங்களுக்காக அக்டோபர் 15 முதல் அக்டோபர் 29 வரை 14 நாள்களுக்கு இடைக்காலமாக ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார் ஷர்ஜீல் இமாம்.

இந்த வழக்கு தொடர்பாக முறைப்படி ஜாமின் வழங்கக்கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த செப்டம்பர் 2 அன்று ஷர்ஜீல் இமாமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது நிலுவையில் உள்ள நிலையில், தற்போது தில்லி நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் கோரியுள்ளார்.

முன்னதாக, தில்லி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷிஃபா-உர் ரெஹ்மான் மற்றும் தாஹிர் ஹூசைன் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Bihar Election | Bihar Assembly Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Election 2025 | Bihar Assembly Election 2025 | Sharjeel Imam | Delhi Court |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in