
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று (நவ.9) காலை செகந்திராபாத்-ஷாலிமார் வாராந்திர அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒவ்வொரு வாரமும், வெள்ளிகிழமை அதிகாலை 3.55 மணிக்கு தெலங்கானா மாநிலத்தின் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி வாரங்கல், விசாகப்பட்டினம், விஜயநகரம், புவனேஷ்வர், கட்டக், கரக்பூர் வழியாக சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் ரயில்நிலையத்தை சென்றடையும், செகந்திராபாத்-ஷாலிமார் (22850) வாராந்திர அதிவிரைவு ரயில்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல செகந்திராபாதில் இருந்து கிளம்பியது செகந்திராபாத்-ஷாலிமார் அதிவிரைவு ரயில். இன்று (நவ.9) காலை 5.31 மணிக்கு கொல்கத்தாவுக்கு 40 கி.மீ.க்கு முன்பு ஹவுரா ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள நல்பூரில் இந்த அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என தென்கிழக்கு ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது.
இதில் ரயிலின் 2 பெட்டிகளும், 1 பார்சல் பெட்டியும் தடம்புரண்டன. ஆனால், இந்த விபத்தால் உயிரிழப்புகளும், பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும், விபத்துக்குப் பிறகு அருகில் இருந்த சந்திராகாச்சி மற்றும் கரக்பூர் ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு ரயிலும், மருத்துவ நிவாரண ரயிலும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
அதன்பிறகு ரயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, ஏறத்தாழ 10 பேருந்துகளில் கொல்கத்தா நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தடம்புரண்ட ரயிலின் பெட்டிகளை தண்டவாளத்தில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.