ஆபாசக் காணொலி விவகாரம்: முன்பே எச்சரித்தாரா பாஜக தலைவர்?

"ஆபாசக் காணொலிகள் அடங்கிய மற்றொரு பென் டிரைவ் காங்கிரஸ் தேசியத் தலைவர்களைச் சென்றடைந்துள்ளன."
ஆபாசக் காணொலி விவகாரம்: முன்பே எச்சரித்தாரா பாஜக தலைவர்?
படம்: https://twitter.com/iPrajwalRevanna

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொலி விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர் முன்கூட்டியே எச்சரித்தது தொடர்புடையக் கடிதம் இணையத்தில் கசிந்து வருகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. கடந்த செப்டம்பர் முதல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ளன. இந்த விவகாரம் பாஜகவையும் பாதித்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் தேவராஜ் கௌடா கட்சியின் மாநிலத் தலைமையை ஏற்கெனவே எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திராவுக்கு தேவராஜ் கௌடா கடந்த டிசம்பர் 8-ல் எழுதியதாக இணையத்தில் வெளியாகியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஹெச்டி தேவெகௌடா குடும்பத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா உள்பட பல்வேறு தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. பென் டிரைவில் 2,976 காணொலிகள் உள்ளன. இந்தக் காணொலிகளில் இடம்பெற்றுள்ள பெண்களில் சிலர் அரசு ஊழியர்கள்.

பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு இந்தக் காணொலிகளைக் கொண்டு அவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள். இந்தக் காணொலிகள் அடங்கிய மற்றொரு பென் டிரைவ் காங்கிரஸ் தேசியத் தலைவர்களைச் சென்றடைந்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தாலோ, ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக ஆதரித்தால், இந்த விடியோக்கள் பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தப்படும். பாலியல் வன்கொடுமை குடும்பத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக நம் மீதும் அந்தக் கறை படியும். தேசிய அளவில் நம் கட்சிக்கு இது பெரிய களங்கத்தை உண்டாக்கும்" என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறு வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கு இரு நாள்களுக்கு முன்பு ரேவண்ணா தொடர்புடைய காணொலிகள் இணையத்தில் பரவலாகப் பரவத் தொடங்கின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in