
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பாலியல் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 வயது சிறுவனுக்குப் பிணை வழங்குவது தொடர்புடைய வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் அராதி ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.
வழக்கு விசாரணையின்போது இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறுகையில், "குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பாலியல் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. 9-ம் வகுப்பிலிருந்து தான் பாலியல் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்பது கூடாது. அதிகாரிகள் தான் அறிவுபூர்வமாகச் செயல்பட்டு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலம், தங்களுடைய உடல்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குழந்தைகளால் தெரிந்துகொள்ள முடியும். அதன்மூலம், தேவையான கவனிப்புகளை அவர்களால் எடுத்துக்கொள்ள முடியும்" என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பதின்பருவச் சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது கடந்த செப்டம்பர் 10 அன்று கூடுதல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், உத்தரப் பிரதேச பாடத்திட்டத்தில் பாலியல் சார்ந்த கல்வி எப்படி வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக உத்தரப் பிரதேச அரசு சார்பில், கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பாலியல் சார்ந்த கல்வி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. என்சிஇஆர்டி வழிகாட்டுதலின் பெயரில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரமாணப் பத்திரம் பற்றி பேசும்போது தான், சிறு வயதிலிருந்தே பாலியல் சார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்திருக்கிறார்கள்.
Supreme Court | Sex Education |