பாதுகாப்பு ஒத்திகை - கோப்புப்படம்
பாதுகாப்பு ஒத்திகை - கோப்புப்படம்ANI

மே 7-ல் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

ஒத்திகையின்போது, மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், வரும் மே 7-ல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்நிய நாட்டு ராணுவம் திடீர் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களைக் கொண்டு இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மாநில அரசுகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

எதிரி நாட்டு வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்வது, தாக்குதல் சமயங்களில் தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை மக்களைப் பின்பற்றச் செய்வது, மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவது போன்றவற்றை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையின்போது மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்.22 அன்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகப் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று விமானப்படை தளபதி பிரதமரை சந்தித்த நிலையில், இன்று (மே 5) மத்திய பாதுகாப்பு செயலர் பிரதமரை சந்தித்துள்ளார்.

மேலும், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தேசத்தின் நலன்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படும் சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in