காங்கிரஸ் கட்சிக்கு வரிச் சலுகை மறுப்பு: மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு! | ITAT

2017-ல் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்திற்குப் பிறகு, இத்தகைய நன்கொடைகள் அனைத்தும் வங்கிக் கணக்குகள் வழியாகவே பெறப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு வரிச் சலுகை மறுப்பு: மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு! | ITAT
1 min read

2017-18-ம் ஆண்டுக்கான வரி கோரிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டை, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) தள்ளுபடி செய்துள்ளது.

ரூ. 199 கோடிக்கு மேல் கிடைக்கப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட உத்தரவை அக்கட்சி எதிர்த்தது. குறிப்பாக, இந்த தொகை நன்கொடைகளாக கிடைக்கப்பெற்றதாகவும், இதனால் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரியது.

2017-2018-ம் நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடைகளுக்கு காங்கிரஸ் கட்சி வருமான வரி செலுத்தவேண்டும் என்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் முடிவை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.

2017-2018 நிதியாண்டிற்காக பிப்ரவரி 2, 2019 அன்று காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது. அதில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 13ஏ-வின் கீழ் ரூ. 199.15 கோடிக்கு விலக்கு பெறப்பட்டதாகக் கூறி, வருமானம் இல்லை என்று அறிவித்தது.

செப்டம்பர் 2019-ல் வருமான வரித்துறை மேற்கொண்ட ஆய்வின்போது, நன்கொடையாளருக்கு ரூ. 2,000-க்கு மேல் என்ற வகையில், ரூ. 14.49 லட்சத்தை காங்கிரஸ் கட்சி ரொக்கமாக நன்கொடையாகப் பெற்றதாக கண்டறியப்பட்டது. இது சட்டப்பிரிவு 13ஏ(டி)-ஐ மீறுவதாக கூறப்பட்டது.

குறிப்பாக 2017-ல் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்திற்குப் பிறகு, இத்தகைய நன்கொடைகள் அனைத்தும் வங்கிக் கணக்கு வழியாகவே பெறப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியின் மொத்த வருவாய் ரூ. 199.15 கோடியாக இருந்த நிலையில், ரூ.197.43 கோடிக்கு செலவு கணக்கு காண்பிக்கப்பட்டு, ரூ. 1.71 கோடி உபரியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஜூலை 6, 2021 தேதியிட்ட உத்தரவில் வரி விலக்கு மறுக்கப்பட்டு, முழுத் தொகைக்கும் வரி விதிக்கப்பட்டது. வருமான வரி ஆணையர் (மேல்முறையீடுகள்) மார்ச் 28, 2023 அன்று இந்த உத்தரவை உறுதி செய்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (ITAT) அணுகியது. இந்நிலையில், 2017 சட்ட திருத்தத்தை மேற்கோள்காட்டிய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in