
தேர்தல் வாக்கு இயந்திரங்கள் மீது புகார் இருந்த 20 தொகுதிகள் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் கணித்திருந்தன. வாக்கு எண்ணிக்கையின் போது காலை 9.15, 9.30 மணி வரை நடைபெற்ற சுற்றுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் முன்னிலை வகித்திருந்தது. இதன்பிறகு, நிலைமை படிப்படியாக மாறத் தொடங்கியது. அடுத்தடுத்து சுற்றுகளில் முன்னிலை கண்ட பாஜக, இறுதியில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஹரியாணா தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை என அவர் கூறினார். இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, கேசி வேணுகோபால், பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட், ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரா, அஜய் மாகென் மற்றும் உதய் பன் ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "20 தொகுதிகள் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். இந்தத் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் 99 சதவீதம் சார்ஜ் இருந்தது தொடர்பாக எங்களுடைய வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் புகார் அளித்துள்ளார்கள். வாக்கு எண்ணிக்கை நாளின்போதே இதை எழுப்பினோம். 99 சதவீதம் சார்ஜ் இருப்பதாகக் காண்பித்த வாக்கு இயந்திரங்கள் இருந்த இடத்தில்தான் காங்கிரஸ் பெரும்பாலும் தோல்வியைச் சந்திதுள்ளது. 60 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் இருப்பதாகக் காண்பிக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் இருந்த இடங்களில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது?" என்றார்.
முன்னதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்த பிறகு பேசிய பவன் கெரா, "பேட்டரி திறன் தவிர்த்து மற்ற புகார்களை அடுத்த 48 மணி நேரத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளோம்" என்றார் அவர். இதன்படி, ஹரியாணாவில் 20 தொகுதிகளில் தேர்தல் முறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே அளித்த புகாருடன் இதுவும் இணைக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் இதனை எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.