இனக்கலவரத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மணிப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையின்போது தடைசெய்யப்பட்ட யு.என்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இனக்கலவரத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மணிப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு!
ANI
1 min read

கடந்த 3 மே 2023-ல் மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்டது. இன்றுடன் (மே 2) இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இம்பால், சுராசந்த்பூர், காங்போக்பி மாவட்டங்களின் தலைமையிடங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநாடு நடைபெறவுள்ள இம்பாலின் குமன் லம்பக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையின்போது தடைசெய்யப்பட்ட யு.என்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2-ம் நினைவு தினத்தை ஒட்டி குகி மாணவர்கள் அமைப்பு மற்றும் ஸோமி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவை குகி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், மே 3-ல் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இரண்டு மாணவர் அமைப்புகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

`இனக்கலவரம் ஏற்பட்டு, மே 3-ல் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அனைவரும் கல்வி மற்றும் வணிக நிறுவனங்களை மூடிவிட்டு அமைதி காக்கவேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் மக்கள் கருப்புக்கொடிகளை ஏற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மைதேயி இன மக்களுக்கும், அண்டை மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஸோ இன மக்களுக்கும் இடையே கடந்த 3 மே, 2023-ல் முதல்முறையாக மோதல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கலவரங்களால், இதுவரை 260-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in