
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்படுவதை அடுத்து, தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலைநகர் தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில், 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணா இன்று (ஏப்ரல் 10) ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதை அடுத்து நீதிமன்றத்தைச் சுற்றி துணை ராணுவப் படையினரும், தில்லி காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகும் வகையில், தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நரேந்திர மான் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து 3 வருடங்கள் அல்லது வழக்கு விசாரணை முடியும் வரை அவர் இந்த பொறுப்பை வகிப்பார் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ராணா மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த கனடா குடிமகனான 64 வயது, தஹாவூர் ஹூசைன் ராணா, டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் (தாவூத் கிலானி) இணைந்து 2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டார்.
2009-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. சிகாகோவில் வைத்து ராணாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராணாவை ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதன் அடிப்படையில், ராணாவை இந்திய அரசு அதிகாரிகளிடம் அமெரிக்க அரசு ஒப்படைக்கிறது. இதைத் தொடர்ந்து தில்லிக்கு அழைத்துவரப்படும் ராணா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, திஹார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்புத் தொகுதியில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.