ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செப்.25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகர், கந்தெர்பால், பட்காம், ரியசி, ரஜௌரி, பூஞ்ச் என 6 மாவட்டங்களில் உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடக்கம். கந்தெர்பால், பட்காம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ஓமர் அப்துல்லா. மொத்தம் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய வாக்குப்பதிவில் 157 சிறப்பு வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் நிர்வகிக்கும் 26 பிங்க் வாக்கு மையங்கள், மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் 26 வாக்கு மையங்கள், இளைஞர்கள் நிர்வகிக்கும் 26 வாக்கு மையங்கள், 26 பசுமை வாக்கு மையங்கள், 31 எல்லையோர வாக்கு மையங்கள் போன்றவை அடக்கம்.
கடந்த செப்.18-ல் ஜம்மு காஷ்மீரின் 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு அக்.1-ல் நடைபெறகிறது. இதைத் தொடர்ந்து அக்.8 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.