அதானி தொடர்புடைய நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு

இந்த முறை அதானி குழுமம் மட்டுமல்லாமல் செபியின் தலைவர் மாதபி புச் மீதும் குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்கின் அறிக்கை
அதானி தொடர்புடைய நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு
PRINT-146
1 min read

இந்தியாவை மையமாக வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் ஒரு முறை இந்திய பங்குச்சந்தை வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2023 ஜனவரியில், இந்தியாவின் அதானி குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

அதானி குழுமத்துக்கு பல இந்திய பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியிருந்தன. இதனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரின. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் செபி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கியது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை மையப்படுத்து வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் ஒரு முறை பேசு பொருளாகியிருக்கிறது. இந்த முறை அதானி குழுமம் மட்டுமல்லாமல் செபியின் தலைவர் மாதபி புச் மீதும் குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்கின் அறிக்கை.

நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில், செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் ஆயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், `இந்த காரணத்தினால்தான் அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை’, எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டைக் கையிலெடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விசாரிக்க மீண்டும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றன.

`2022-ல் செபியின் தலைவராக மாதபி புச் பொறுப்பேற்றவுடன், கௌதம் அதானியைச் சந்தித்துப் பேசியிருப்பது பல புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அப்போது, அதானி நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை செபி விசாரித்து வந்ததை நினைவில் கொள்ள வேண்டும்’, என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in