
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. ஒருவர் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் காட்டிய பேனருக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிதாகத் தேர்வாகியுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உரையுடன் கடந்த நவ.4-ல் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்குவதற்கான அரசுத் தீர்மானம், சட்டப்பேரவையில் நேற்று (நவ.5) முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி பாஜக எம்.எம்.ஏ.க்களின் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று (நவ.7) காலை மீண்டும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூடியது.
அப்போது, கடந்த 2019-ல் இந்திய நாடாளுமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஆகியவற்றை மீண்டும் வழங்கக்கோரும் பேனரை சட்டப்பேரவையின் மையப்பகுதியில் நின்றுகொண்டு காட்டினார் அவாமி இத்திஹாத் கட்சியின் எம்.எல்.ஏ. குர்ஷித் அஹமத் ஷேக்.
இந்த குர்ஷித் அஹமத் ஷேக், தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, பாரமுல்லா தொகுதி சுயேட்சை எம்.பி. எஞ்சினியர் ரஷீத்தின் தம்பியாவார். சட்டப்பேரவைக்குள் பேனரைக் காட்டிய குரஷித் அஹமத் ஷேக்கின் செயலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தனர் எதிர்க்கட்சி பாஜக எம்.எல்.ஏ.க்கள்.
மேலும், அஹமத் ஷேக்கின் கைகளில் இருந்து அவர்கள் பேனரைப் பிடுங்க முயன்றனர். இதைக் கண்டித்து சில ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்ததால் அங்கே தள்ளுமுள்ளும், கைகலப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்ட எம்.எம்.ஏ.க்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார் சட்டப்பேரவைத் தலைவர்.