
டானா புயல் காரணமாக ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிஷாவில் அக்டோபர் 25 அன்று அதிகாலையில் பிடர்கனிகா தேசியப் பூங்கா மற்றும் பாத்ரக் மாவட்டத்திலுள்ள தம்ரா துறைமுகம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடக்குமபோது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரி, கேந்த்ரபாரா, கட்டாக் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அக்டோபர் 23, அக்டோபர் 24, அக்டோபர் 25 ஆகிய மூன்று நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 26 மற்றும் அக்டோபர் 27 சனி, ஞாயிறு என்பதால், அக்டோபர் 28 அன்று தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
டானா பாதிப்பு மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்திலும் கொல்கத்தா, ஹௌரா, ஹூக்லி உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிப்பை எதிர்கொள்ளும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். 14 மாவட்டங்களில் 3,000 இடங்கள் அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் கடலோரப் பகுதிகள். புயல் கரையைக் கடக்கும் முன் ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்ற ஒடிஷா அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப் படை 150 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மீட்புப் பணிக்குத் தேவையான உபகரணங்களை புவனேஸ்வருக்கு அனுப்பி வைத்துள்ளது.