
தில்லியில் தனியார் பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், தில்லியில் விதிகளை மீறும் பள்ளிகளுக்கு ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
செய்தியாளர்களைச் சந்தித்த தில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், வரும் காலங்களில் தில்லியிலுள்ள 1,677 தனியார் பள்ளிகளில் தனிச்சையாக கட்டணம் உயர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்த தில்லி அரசின் இம்முடிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.
"இந்த அவசரச் சட்டம் துணைநிலை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இது சட்டமாக வடிவு பெறும்" என்றார் தில்லி கல்வி அமைச்சர்.
இந்த அவசரச் சட்டத்தின்படி, அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணத்தைப் பள்ளிகள் வசூல் செய்தால், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை பள்ளி நிர்வாகங்கள் 20 வேலை நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். முதல் முறை இத்தவறைச் செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக தவறுகளைச் செய்யும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், 20 நாள்களுக்குப் பிறகு அபராதத் தொகை இரு மடங்காக உயரும். 40 நாள்களைத் தாண்டினால் அபராதத் தொகை மும்மடங்காக உயரும்.
பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை நடைமுறையைக் கண்காணிக்க பள்ளி அளவில், மாவட்ட அளவில் மற்றும் மறுஆய்வுக்கு என மூன்று கமிட்டிகள் அமைக்கப்படவுள்ளன. மறுஆய்வு கமிட்டிக்கு கல்வி இயக்குநர் தலைமை வகிப்பார். மாவட்ட கமிட்டிக்கு மாவட்ட கல்வி இயக்குநர் தலைமை வகிப்பார்.
பள்ளி கமிட்டியை பொறுத்தவரை எல்லா பள்ளியிலும் பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு பிரதிநிதி இதன் தலைவராக இருப்பார்.