
2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது நடைபெற்ற ரூ. 371 கோடி திறன்மேம்பாட்டுக் கழக ஊழலில், அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது அமலாக்கத்துறை.
ஆந்திர முதல்வராக 2014 முதல் 2019 வரை பதவி வகித்தார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. அந்த சமயம் ஆந்திர அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 371 கோடிக்கு ஊழல் நடந்ததாகக் கூறி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது கடந்த 2023-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு.
சுமார் 53 நாட்கள் சிறையில் இருந்தபிறகு, கடந்தாண்டு அக்.31-ல் ஜாமின் பெற்று வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கடந்த ஏப்ரல் 5-ல் விஜயவாடாவில் உள்ள சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில், ஆந்திர மாநில குற்றப் புலனாய்வு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்தக் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஊழல் மேற்கொண்டது குறித்த விசாரணையை மேற்கொண்டது அமலாக்கத்துறை. இதன் பிறகு குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிசைன்டெக் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ. 31.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த அக்.14-ல் திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிசைன்டெக் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிறருக்கு சொந்தமான ரூ. 23.5 கோடி மதிப்பிலான சொத்துகள், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன.
ஆனால் இந்த திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் எந்த வகையிலும் அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இல்லை என நேற்று (அக்.15) அறிவித்துள்ளது அமலாக்கத்துறை.
நடந்து முடிந்த 18-வது மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் அதற்கு முன்பு ஆந்திராவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டங்களில், ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு மீது சுமத்திப் பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.