தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழு வழக்கு: நவம்பர் 11-ல் விசாரணை! | Supreme Court |

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்தது.
தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழு வழக்கு: நவம்பர் 11-ல் விசாரணை! | Supreme Court |
2 min read

தேர்தல் ஆணையர்கள் சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நவம்பர் 11-ல் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறாத வகையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிரான வழக்கு நவம்பர் 11 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 2023-ல் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய நியமனக் குழுவால் நியமிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக சட்டம் இயற்றப்படும் வரை தேர்தல் ஆணையர்களை இந்தக் குழு நியமிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், அதே ஆண்டு டிசம்பரில் தேர்தல் ஆணையர்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நியமனக் குழுவில் பிரதமர், மத்திய கேபினட் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டு எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறுவார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்தக் குழுவில் இடம்பெறவில்லை.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்குர் உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமனத்துக்கு முன்பே இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவிருந்தது. கடந்த பிப்ரவரி 17 அன்று தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார் ஞானேஷ் குமார். ஆனால், பிப்ரவரி 12 அன்று வழக்கு விசாரிக்கப்படவிருந்தது. பிறகு, அன்றைய நாள் பட்டியலிடப்படாததால், பிப்ரவரி 19 அன்று விசாரிக்கப்படவிருந்தது.

தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, இதற்கு முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையர்கள் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மார்ச் 2024-ல் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் தான், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள், சட்டம் 2023-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கவிருந்தது. ஆனால், நேரப் பற்றாக்குறை காரணமாக இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இந்த மனு விசாரிக்கப்படுவதே இல்லை என்றார். ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் செலவிட்டால்போது, மனுதாரர்கள் வாதங்களைச் சமர்ப்பிக்க 2 மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்றார் பிரசாந்த் பூஷண். நவம்பர் 11 அன்று காலைக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதி சூர்ய காந்த், அன்றைய நாளில் அவசரமற்ற வழக்குகளை ஒத்திவைக்கும் என்று தெரிவித்தது.

Supreme Court | Election Commissioners Appointment Panel | The Election Commissioners Act |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in