
காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019-ல் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரியும் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக சோனம் வாங்சுக் அறிவித்தார். பிறகு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சோனம் வாங்சுக், ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவருடைய மனைவி, கீதாஞ்சலி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படவில்லை என்று வாதிட்டார். கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படாமல் கைது உத்தரவை எதிர்க்க முடியாது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.
கைதுக்கான காரணம் குறித்து வாங்சுக்கிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதாகவும் அவருடைய மனைவியிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு சட்டரீதியான அவசியம் இல்லை என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்வாதம் வைத்தார். இருந்தபோதிலும், மனைவியிடம் கைதுக்கான காரணம் குறித்து தெரிவிக்க அவர் ஒப்புக்கொண்டார்.
மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டு வாங்சுக்குக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கபில் சிபல் கோரிக்கை வைத்தார். ஆனால், மருத்துவப் பரிசோதனைக்காக வாங்சுக் அழைத்துச் செல்லப்பட்டபோது, தான் எந்த மருந்துகளும் உட்கொள்வதில்லை என்று கூறியதாக துஷார் மேத்தா கூறினார். மேலும், அவருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அது வழங்கப்படும் என்றும் துஷார் மேத்தா தெளிவுபடுத்தினார்.
வாங்சுக்கைப் பார்க்க அவருடைய மனைவி அனுமதிக்கப்பட வேண்டும் என கபில் சிபல் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த துஷார் மேத்தா, வாங்சுக்கைச் சந்திப்பதற்கான கோரிக்கையை அவர் ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டார். இது பரிசீலிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் வழங்கப்படுவதில்லை மற்றும் மனைவியைக் காண அனுமதி வழங்கப்படுவதில்லை என்கிற தோற்றத்தை ஊடகங்களிடம் ஏற்படுத்த வேண்டும்" என்பதற்காகவே இவ்வாறு வாதங்கள் வைக்கப்படுவதாக துஷார் மேத்தா கூறினார்.
இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விரிவாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 14-க்கு ஒத்திவைத்தது.
Sonam Wangchuk | Supreme Court | Union Government |