
திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்தது தொடர்பாக மக்களவைச் செயலரிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாவட்டம் கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கௌதம் அதானி மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வியெழுப்ப தொழிலதிபரிடமிருந்து மஹுவா மொய்த்ரா பரிசுகள் மற்றும் பணம் பெற்றதாக நெறிமுறைக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில் அவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கடந்த 8-ம் தேதி தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது விவாதம் நடைபெற்று, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, பதவி நீக்கத்துக்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக இரு வாரங்களில் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு மக்களவைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைச் செயலர் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்துக்கு மஹுவா மொய்த்ரா மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கானது மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.