ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் ஹிந்து கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என கூறப்பட்டது.
ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை செய்து வருவதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாகத்தில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாதாள அறையில் ஹிந்துக்கள் சென்று பூஜை செய்து வழிபடலாம் என மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 31-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மசூதி மேலாண்மைக் குழு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 26-ல் மசூதி மேலாண்மைக் குழுவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மசூதி மேலாண்மை குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது மசூதியின் வளாகத்தில் ஹிந்துக்கள் பூஜை செய்து வழிபட்டு வருவதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு காசி விஸ்வநாதன் கோயில் அறங்காவலர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஞானவாபி மசூதியில் முஸ்லிம்கள் நமாஸ் செய்வதற்குத் தற்போதைய நிலையே தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in