
`வினாத்தாள் கசிவு போன்றவற்றைத் தடுக்க சைபர் செக்யூரிட்டி முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்று நீட் மறுதேர்வு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மே 5-ல் நடந்த மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை முன்வைத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய போதுமான தரவுகள் இல்லை, ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் வகையில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை 23-ல் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் நீட் மறுதேர்வு வழக்கின் விரிவான தீர்ப்பை இன்று (ஆகஸ்ட் 2) காலை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதில், வினாத்தாள் கசிவு, தேர்வின்போது தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது, இயற்பியல் கேள்விக்குத் தவறான பதிலைத் தேர்வு செய்தது என நீட் தேர்வு விவகாரத்தில் சீரற்ற முறையில் செயல்பட்ட தேசிய தேர்வு முகமையை நீதிபதிகள் விமர்சித்தனர்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரம் பின்வருமாறு:
`வரும் காலத்தில் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வினாத்தாள் கையாளுதல், சேமித்தல் போன்றவற்றை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். டேட்டா கசிவு, அதாவது வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில், வினாத்தாள் தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடுமையான சோதனைகளை உறுதி செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் வருங்காலத்தில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க ஆலோசனைகள் வழங்க கடந்த ஜூன் 22-ல் மத்திய அரசால் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. தேர்வு நடவடிக்கையில் பாதுகாப்பு முறைகளை உறுதிப்படுத்த ஒரு வழிமுறையை இந்தக் குழு உருவாக்க வேண்டும்’.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளும் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா.