
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துகள் கலைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடன் கொடுத்தவர்கள், ஊழியர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்களின் நலனைக் கருத்தில்கொள்ளும்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துகள் கலைக்கப்படுவதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருதியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் கடந்த 2019 ஏப்ரலில் தனது சேவையை நிறுத்தியது. இந்த நிறுவனம் திவாலானதையடுத்து, நிலுவைக் கடன் தொகையை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிக் கூட்டமைப்பு திவால் மனுவைத் தாக்கல் செய்தது.
இதனிடையே, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் வகையிலான திட்டத்தை ஜலன் கல்ராக் கூட்டமைப்பு வடிவமைத்தது. இதற்கு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்தது.
மறுசீரமைப்புத் திட்டத்தின்படி ஜலன் கல்ராக் கூட்டமைப்பு ரூ. 4,783 கோடியைச் செலுத்த வேண்டும். இதில் முதலில் ரூ. 350 கோடியைச் செலுத்த வேண்டும். இதைச் செலுத்த ஜலன் கல்ராக் கூட்டமைப்பு தவறியது. இதில் தொடர்ந்து, தாமதம் ஏற்பட்டு வந்தது. மூன்று ஆண்டுகள் ஆகியும் இதில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.
மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைப்பதே சிறந்த முடிவாக இருக்க முடியும் என்று கருதி, நிறுவனத்தைக் கலைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறுசீரமைப்புத் திட்டம் ஒப்புதல் வழங்கிய தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) உத்தரவு ரத்து செய்யப்பட்டது.