

தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலர்கள், நவம்பர் 3 அன்று ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தில்லியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களைப் பிடித்துக் காப்பகங்களில் அடைக்க வேண்டும். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது.” எனக் கடந்த ஆகஸ்ட் 8 அன்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 22 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்தது. மேலும், விலங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளின் கீழ் மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்கம், தெலங்கானா, தில்லி ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. தமிழ்நாடு உட்பட 25 மாநிலங்கள் தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், “உலக நாடுகளின் மத்தியில் இந்தியா தவறாகக் காட்டப்படுகிறது. இது முக்கியமான பிரச்னை என்பதைச் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளவில்லையா?” என்று கேட்டுக் கண்டித்தனர். மேலும், பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், நவம்பர் 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The Supreme Court has ordered the Chief Secretaries of 25 states, including Tamil Nadu, who failed to file an affidavit regarding measures to control the stray dog population, to appear in person on November 3.