
மத்திய அரசின் வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க முடியாது என்றாலும் சில பகுதிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் நன்கொடையாக அளிக்கும் நிலங்கள் மற்றும் சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கும் ஆணையமாக வக்ஃபு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதற்காக 1995-ல் வஃபு சட்டம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அண்மையில் இந்தச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும் இஸ்லாமியர் உட்பட பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் இன்று (செப். 15) தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் முழுவதுக்கும் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், சட்ட திருத்தத்தின் சில பகுதிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதன்படி, வக்ஃபு ஒன்றை உருவாக்க ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிக்கும் விதிகள் வகுக்கப்படும் வரை இவ்விதிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் 4 பேர் வரை இருக்கலாம். வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை இஸ்லாமியராக இருக்க வேண்டும். வாரியத்தில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிலம் நன்கொடையை அளிக்கலாம் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு என நிலத்தை அறிவிக்கும்போது அது அரசாங்க சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கும் உண்டு என்ற திருத்தமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை தீர்ப்பளிக்க ஆட்சியரை அனுமதிப்பது அதிகாரப் பிரிவினையை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
Supreme Court | Waqf Amendment Act | Waqf Board | CJI BR Gavai |