

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 - 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதற்கு இருக்கும் தடையை நீக்கக் கோரி 2006-ல் இந்திய இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2018 செப்டம்பர் 28 அன்று சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. கோயிலில் கடைபிடிக்கப்படும் பாலியல் பாகுபாடு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனு
சர்ச்சைக்குரிய இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
அரசியல் சாசன அமர்வு விசாரணை
அப்போது, “இந்த வழக்கு தொடர்பாக தொடரப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்களை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஏப்ரல் 7 முதல் விசாரிக்கும். ஏப்ரல் 7 முதல் 22 வரை முழுமையாக இதற்கான நேரம் ஒதுக்கப்படும். இதில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோதிமால்ய பக்சி, விபுல் பஞ்சோலி உள்ளிட்ட ஒன்பது பேர் இடம்பெறுவார்கள். இதில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியுள்ள மனுக்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரையிலும், அதனை எதிர்க்கும் மனுக்கள் ஏப்ரல் 14 உதல் 16 வரையிலும் விசாரிக்கப்படும். கூடுதல் மனுக்கள் ஏப்ரல் 21 அன்று விசாரிக்கப்படும். இவ்வழக்கு தொடர்பான எழுத்துப் பூர்வ ஆவணங்கள் அனைத்தையும் வழக்கறிஞர்கள் மார்ச் 14-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
தொடர்புடைய பிற வழக்குகள்
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகிறார். மறுஆய்வு மனுக்களுக்கு ஆதரவாக வாதிடுவதற்காக வழக்கறிஞர் கிருஷ்ண குமார் சிங்கை இந்த அமர்வு நியமித்துள்ளது. வழக்கறிஞர் சாஷ்வதி பாரி எதிர்த்தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2019-ல் இவ்விவகாரத்தை விசாரிக்க உருவாக்கப்பட்ட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 8 பேர் ஓய்வு பெற்றுவிட்டதால், அது கலைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு மசூதிகளுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளித்தல், பார்சி இனப் பெண்கள் நெருப்புக் கோயிலுக்குள் நுழைய அனுமதி அளித்தல் போன்ற மனுக்களும் இதனுடன் பட்டியலிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
The Supreme Court has set itself two weeks – April 7 to April 22 – to complete hearing a clutch of petitions relating to an earlier judgement that allowed women of all ages entry into Kerala's famous Sabarimala Temple. A bench led by Chief Justice Surya Kant, Justice Joymalya Bagchi, and Justice Vipul M Pancholi, posted the matter to a nine-judge bench.