மார்ச் 21 வரை அவகாசம், அதற்குள் அனைத்தையும் வெளியிட வேண்டும்: எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

"எஸ்பிஐ வசம் இருந்த அனைத்து விவரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, எதுவும் மறைக்கப்படவில்லை என எஸ்பிஐ தலைவர் வியாழக்கிழமைக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்."
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ANI

தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்புடைய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. எஸ்பிஐ தரப்பில் ஜூன் மாதம் வரை அவகாசம் கோரப்பட்டபோதிலும், உச்ச நீதிமன்றம் இதை நிராகரித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்தத் தரவுகள் கடந்த வியாழனன்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளியன்று விசாரித்தது. அப்போது, தேர்தல் நிதி பத்திரங்களினுடைய எண்களின் விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டிருந்தபோதிலும், அதை ஏன் வெளியிடவில்லை என உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ-யிடம் வினவியது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை மட்டும் எஸ்பிஐ வெளியிடக் கூடாது. தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ வசம் உள்ள அனைத்துத் தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். தேர்தல் நிதி பத்திரங்களுடைய எண்கள் என எந்தத் தகவலாக இருந்தாலும், அதை சமர்ப்பித்தாக வேண்டும். எஸ்பிஐ வசம் உள்ள அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எந்தத் தகவலும் தங்கள் வசம் இல்லை, எதுவும் மறைக்கப்படவில்லை என்று எஸ்பிஐ தலைவர் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். எஸ்பிஐ-யிடம் இருந்து தகவல்கள் கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் அதை உடனடியாக இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in