மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனை: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
PRINT-135

மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனை: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

பயிரிட்டால் அதிக மகசூலைத் தரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உருவாக்கினார் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் தீபக் பெண்டால்
Published on

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை களப் பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயிரிட்டால் அதிக மகசூலைத் தரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உருவாக்கினார் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் தீபக் பெண்டால். இதை அடுத்து கடந்த 2022 அக்டோபரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை களப் பரிசோதனை செய்ய டெல்லி பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளித்தது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

இதை அடுத்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால் அதனால் இயற்கைக்கும், விவசாயத்துக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி தேசிய அளவில் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து ஜீன் கேம்பெய்ன் என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று (ஜூலை 24) வழங்கப்பட்டுள்ளது.

`மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனைக்கு அனுமதித்தது செல்லாது. இது மக்களின் நம்பிக்கையை மீறுவதாக உள்ளது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்களுக்கு இதனால் பாதிப்பு உண்டாகும். நிபுணர் குழுவின் அறிக்கையை மத்திய அமைச்சகம் புறக்கணித்துள்ளது. எனவே களப்பரிசோதனைக்கு இதை அனுமதிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தார் நாகரத்னா.

` மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனைக்கு அனுமதி அளித்தது செல்லும். போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் களப் பரிசோதனையைத் தொடரலாம்’ என்று தீர்ப்பளித்தார் சஞ்சய் கரோல்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் களப் பரிசோதனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in