கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் கடந்த 9 அன்று இறந்த நிலையில் கிடந்தார். பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நாடு முழுக்கப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை ஒருவரைக் கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா காவல் துறை மீது திருப்தியின்மையை வெளிப்படுத்திய கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ வசம் மாற்றி கடந்த 13-ல் உத்தரவிட்டது.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜெபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
"கொல்க்கத்தா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படம் மற்றும் காணொளிகள் வெளியில் பரவியது மிகுந்த கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட சட்டம் தடை விதித்துள்ளது. உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நாம் காட்டும் கண்ணியம் இதுதானா?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதைத் தற்கொலை எனக் கடந்துபோக முயற்சித்ததும், உடலைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கப்படாதது குறித்தும் கல்லூரி முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், "வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக வழிகாட்டு நெறிமுறைகளைப் பரிந்துரைக்க தேசிய அளவிலான ஒரு குழுவை அமைக்கவுள்ளோம். இந்தச் சம்பவம் மருத்துவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்" என்றார்.
இதுதொடர்பாக குழுவை அமைத்துள்ள உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இரு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு பாதுகாப்பு மற்றும் மற்ற விவகாரங்களைக் கருத்தில் கொண்டு பாலினம் சார்ந்த வன்முறை, பயிற்சிக்கு வருபவர்கள், மருத்துவர்களுக்குக் கண்ணியமான பணியிடம் உள்ளிட்டவற்றைக் கவனத்தில்கொண்டு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு தங்களுடைய அறிக்கையை ஆகஸ்ட் 22-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.