
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-க்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் முறை சட்டவிரோதமானது என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15-ல் தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்படி எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் தேவை என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் இதை நிராகரித்தது. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.