
வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கர்நாடக முதல்வர் சித்தராமையா வரவேற்றுள்ளார்.
ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை முன்நிறுத்தி பொதுவெளியில் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கையாகும். அந்த வகையில், கர்நாடகத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் கிளை ஒன்றில், அதன் மேலாளருடன் வாடிக்கையாளர் ஒருவர் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது.
அந்த காணொளியில், வங்கி மேலாளர் கன்னடத்தில் பேச வேண்டும் என்று வாடிக்கையாளர் வலியுறுத்துகிறார். இதற்கு உள்ளூர் மொழியில் பேசமுடியாது என்று அந்த மேலாளர் பதிலளித்தார். இதை முன்வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலாளரின் செயலுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்கும் காணொளியை அவர் வெளியிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,
`கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய சூரிய நகரா எஸ்.பி.ஐ. கிளை மேலாளரின் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரியை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய எஸ்.பி.ஐ. எடுத்த விரைவான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்.
இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியமான முறையில் நடத்தவேண்டும் மற்றும் உள்ளூர் மொழியில் பேச முயற்சி எடுக்கவேண்டும்.
கலாச்சாரம் மற்றும் மொழியை மதிப்பதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை கட்டாயமாக்கவேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்துகிறேன்’ என்றார்.