
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் திரிபுராவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியுள்ளார்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா நேற்று (மே 11) நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது,
`உங்கள் அனைவருக்கும் நமது அண்டை நாடுகளைப் பற்றி தெரியும். நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், அதை நமது செயற்கைக்கோள்களால் மட்டுமே செய்ய முடியும். நமது 7,000 கி.மீ. கடற்கரைப் பகுதிகளை நாம் கண்காணிக்கவேண்டும். நாட்டின் வடக்குப் பகுதியை முழுமையாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள் மற்றும் டிரோன் தொழில்நுட்பத்தின் உதவியில்லாமல், இதை நாம் செய்யமுடியாது’ என்றார்.
விண்வெளித்துறையில் இந்தியா மேற்கொண்ட சாதனைகள் குறித்து இந்த நிகழ்வில் பேசிய இஸ்ரோ தலைவர், சந்திரனின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்களை சந்திரயான்-1 திட்டம் கண்டுபிடித்ததாகவும், இதைச் செய்த முதல் நாடாக இந்தியா இருப்பதாகவும் கூறினார்.
மேலும், ஒரு துடிப்பான விண்வெளி சக்தியாக இந்தியா மாறி வருவதாகவும், 2040-ம் ஆண்டுக்குள் நாட்டின் முதல் விண்வெளி நிலையம் உருவாகியிருக்கும் எனவும் அவர் கூறினார். 34 நாடுகளுக்காக 433 செயற்கைக்கோள்களை பூமியின் சுற்று வட்டப்பாதையில் இந்தியா நிலைநிறுத்தியுள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார்.