
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி பொறுப்பிற்கு மூத்த நீதிபதி பி.ஆர். கவாய் மும்மொழியப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 11-ல் 51-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சஞ்சீவ் கன்னா மே 13-ல் பணி ஓய்வு பெறவுள்ளார். இதையொட்டி, வழக்கமாகப் பின்பற்றப்படும் மரபுப்படி சஞ்சீவ் கன்னாவுக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி பி.ஆர். கவாயின் பெயர் தலைமை நீதிபதி பொறுப்பிற்காக மத்திய சட்ட அமைச்சகத்திடம் முன்மொழியப்பட்டுள்ளது.
புதிய தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்கும் பட்சத்தில், கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கவிருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 2-வது நபராவார்.
ஆர்.எஸ். கவாய், கமலா கவாய் தம்பதியின் மகனாக மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 1960-ல் பி.ஆர். கவாய் பிறந்தார். அவரது தந்தை ஆர்.எஸ். கவாய் மஹாராஷ்டிர மாநில சட்டமேலவையின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டப்படிப்பை முடித்த பிறகு 1985-ல் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு, 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்விலும் வழக்கறிஞராக கவாய் பணியாற்றினார்.
அதன்பிறகு அரசு உதவி வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர், தலைமை அரசு வழக்கறிஞர் எனப் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். 2003-ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கவாய், 2005-ல் நிரந்தர நீதிபதியானார். அதன் தொடர்ச்சியாக, 2019-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றை அங்கீகரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் கவாய் பங்கேற்றுள்ளார். அதேநேரம், மத்திய அரசின் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் திட்டத்தைச் செல்லாது என்று அறிவித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விலும் கவாய் இடம்பெற்றிருந்தார்.
நவம்பர் 2024-ல், கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை மாநில அரசுகள் புல்டோசர்களை வைத்து இடிப்பதைக் கண்டித்தது. அதோடு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் குடிமக்களின் சொத்துக்களை இடிப்பது சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சிக்கு முரணானது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்கவுள்ளார். எனினும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரை மட்டுமே பணியாற்ற முடியும் என்பதால் 6 மாத காலம் பணியாற்றிய பிறகு வரும் நவம்பரில் பி.ஆர். கவாய் பணி ஓய்வு பெறவுள்ளார்.