
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் நேற்று (நவ.10) ஓய்வுபெற்றார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னாவுக்கு புதிய தலைமை நீதிபதியாக இன்று (நவ.11) காலை 10 மணி அளவில் பதவி பிரமாணம் செய்துவைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
14 மே 1960-ல் பிறந்த சஞ்சீவ் கன்னா, 1983-ல் தில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டங்கள், வணிக சட்டம் போன்ற பல சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற சஞ்சீவ் கன்னா, வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக தில்லியில் பணியாற்றினார்.
இதைத் தொடர்ந்து. 2005-ல் தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கன்னா, 2006-ல் நிரந்தர நீதிபதியானார். அதன்பிறகு, 18 ஜனவரி 2019-ல் அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் சஞ்சீங் கன்னா.
உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் கன்னா வரும் 13 மே 2025 வரை அப்பதவியில் இருப்பார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார், 50-வது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.