
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வருவாய்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ல் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்த பிறகு, 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ். மூன்றாண்டுகள் ஆளுநர் பொறுப்பில் இருந்த சக்திகாந்த தாஸுக்கு, 2021-ல் மீண்டும் மூன்றாண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 12-ல் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக நியமனத்திற்கான மத்திய அமைச்சரவை குழுவால் இன்று (டிச.9) நியமிக்கப்பட்டுள்ளார் மத்திய வருவாய்துறை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சஞ்சய் மல்ஹோத்ரா.
ஐஐடி கான்பூரில் இளங்கலை கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 1990-ல் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சஞ்சய் மல்ஹோத்ரா, தற்போது மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளர் பொறுப்பில் உள்ளார். பொருளாதாரம் மற்றும் வரிகள் தொடர்பாக நீண்ட அனுபவம் உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா 2027 வரை ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருப்பார்.