
சந்தேஷ்காளி பகுதியில் நில அபகரிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
ஷேக் ஷாஜகன் இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மேற்கு வங்க காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேஷ்காளி பகுதியில் ஷேக் ஷாஜகான் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் நில அபகரிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்ததாக, அந்தப் பகுதியிலிருந்த ஏராளமான பெண்கள் குற்றம்சாட்டினார்கள். இந்த விவகாரத்தில் நீதி கேட்டு நிறைய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஷேக் ஷாஜகான் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 23-ல் சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்படாமல் இருந்தார்.
இதுதொடர்புடைய வழக்கு விசாரணையின்போது, "சந்தேஷ்காளி வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவும் கிடையாது. அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லையே" என கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 26-ல் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, மூன்று நாள்களில் ஷேக் ஷாஜகான் மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "ஷேக் ஷாஜகான் நேற்றிரவு 12 மணி முதல் மமதா பானர்ஜி காவல் துறையின் பாதுகாப்பான கட்டுப்பாட்டில் உள்ளார். காவல் துறை மற்றும் நீதிமன்றக் காவலில் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளப்படுவார் என்று செல்வாக்கு மிக்க மத்தியஸ்தர்கள் மூலம் மமதா பானர்ஜியின் காவல் துறையினருடன் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறார். சிறையில் அவருக்கு 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் வசதிகள் வழங்கப்படவுள்ளன. செல்ஃபோன் கொடுக்கப்படும்" என்றார்.