
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தரப்படும் என சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் முன்பு அறிவித்தன. இந்நிலையில் இந்த கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் தேதிகள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகரும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஜன.31 தொடங்கி தில்லியில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். கிழக்கு உத்தர பிரதேசத்தை (பூர்வாஞ்சல்) சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் சத்ருகன் சின்ஹா.
தில்லியின் ரித்தாலா பகுதியில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வரும் ஜன.30-ல் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கின்றனர். கைரானா எம்.பி. இக்ரா ஹசன் உள்ளிட்ட பல சமாஜ்வாதி எம்.பி.க்கள், ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், `இண்டியா கூட்டணி நிலையாக உள்ளது. எங்கெங்கு மாநிலக் கட்சிகள் பலமாக உள்ளதோ, அங்கு அவற்றுக்கு ஆதரவளிக்கவேண்டும் என இண்டியா கூட்டணி உருவானபோது முடிவெடுக்கப்பட்டது எனக்கு நினைவில் உள்ளது’ என்றார்.