வாரிசுரிமை சொத்து: காங்கிரஸின் சாம் பித்ரோடா பேசியது என்ன?

"ஒரு நபர் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சொத்து வைத்திருந்தால், அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த சொத்தில் 45 சதவீதம் மட்டுமே அவருடைய அடுத்த தலைமுறையைச் சென்றடையும்."
வாரிசுரிமை சொத்து: காங்கிரஸின் சாம் பித்ரோடா பேசியது என்ன?

அமெரிக்காவில் சில மாகாணங்களில் நடைமுறையில் இருக்கும் வாரிசுரிமை சட்டம் குறித்து காங்கிரஸ் அயலகப் பிரிவுத் தலைவர் சாம் பித்ரோடா பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும் சாம் பித்ரோடா அறியப்படுகிறார்.

நேர்காணல் ஒன்றில் சாம் பித்ரோடா பேசியதாவது:

"அமெரிக்காவில் வாரிசுரிமை சட்டம் இருக்கிறது. ஒரு நபர் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சொத்து வைத்திருந்தால், அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த சொத்தில் 45 சதவீதம் மட்டுமே அவருடைய அடுத்த தலைமுறையைச் சென்றடையும். 55 சதவீதம் அரசால் கைப்பற்றப்படும். இது சுவாரசியமான ஒரு சட்டம். உங்களுடைய சொத்தில் பாதியை நீங்கள் பொதுமக்களுக்காக விட்டுச்செல்ல வேண்டும். முழுவதுமாக விட்டுச்செல்ல வேண்டும் என்றில்லாமல், பாதியை மட்டுமே விட்டுச்சென்றால் போதும் என்பது எனக்கு நியாயமாகப்படுகிறது.

இந்தியாவில் இது மாதிரியான ஒரு சட்டம் கிடையாது. 10 பில்லியன் மதிப்புக்கு ஒருவர் சொத்து சேர்த்திருந்தால், அது அத்தனையும் அவருடைய வாரிசுகளுக்கே சென்றடைகிறது. இதுபோன்ற விஷயங்களை நாம் விவாதித்து ஆலோசனைக்கு உட்படுத்த வேண்டும்" என்றார் சாம் பித்ரோடா.

சாம் பித்ரோடாவின் இந்தக் கருத்தை பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸும், பித்ரோடாவின் இந்தக் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என்கிற ரீதியில் விளக்கமளித்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in