ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்களை மாற்றியமைக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்க்கிறேன்.
சல்மான் குர்ஷித் - கோப்புப்படம்
சல்மான் குர்ஷித் - கோப்புப்படம்ANI
1 min read

`ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவால், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீர் தனித்துவமானது என்ற கருத்தாக்கம் நீண்ட காலமாக நிலவி வந்தது; அதை அரசாங்கம் ரத்து செய்ததன் மூலம் அந்த கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் இந்தோனேசியாவில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினராக முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது,

`காஷ்மீர் நீண்ட காலமாக ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொண்டது. அதில் பெரும்பான்மையானவை அரசியலமைப்பு சட்டப் பிரிவின் 370-ல் பிரதிபலித்தன, நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து காஷ்மீர் தனித்து நிற்கிறது என்ற தோற்றத்தை அது எப்படியோ அளித்தது. ஆனால் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் இறுதியாக அது முடிவுக்கு வந்தது’ என்றார்.

`தனி’ அடையாள உணர்வை `பெரிய பிரச்னை’ என்று அழைத்த குர்ஷித், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நேர்மறையான விளைவுகளை தனது பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் வாக்குப்பதிவு 65 சதவீதமாக இருந்ததாகவும், அது காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுவ வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்களை மாற்றியமைக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். தன் கருத்துக்கு வலுசேர்க்க பிரிவு 370 ரத்துக்கு பிரிவு அப்பகுதியில் உருவாகியுள்ள செழிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in