
சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டு, அவருக்குப் புதிய மிரட்டல் வந்துள்ளது.
சல்மான் கானைக் கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரூ. 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டதாக நவி மும்பை காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மிகவும் பேசுபொருளான நிலையில், சல்மான் கானுக்குப் புதிய மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை போக்குவரத்துக் காவல் துறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பப்பட்ட செய்தி மூலம் மிரட்டல் வந்துள்ளது. உயிருடன் இருக்கவும் லாரன்ஸ் பிஷ்னாயுடனான பகையை முடித்துக்கொள்ளவும் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
"கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால், சல்மான் கானின் நிலைமை பாபா சித்திக்கைவிட மோசமானதாக இருக்கும்" என்றும் மிரட்டல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலானது வெறும் புரளி என மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கானுக்கு இதுபோன்ற மிரட்டல் வருவது முதன்முறையல்ல. 2022-ல் பாந்த்ரா இல்லத்துக்கு அருகே இருக்கையொன்றில் சிறு குறிப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 2023 மார்ச் மாதம் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் இல்லம் வெளியே இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
அண்மைக் காலங்களாக சல்மான் கான் மற்றும் அவருக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறது.